நம்முடைய தமிழ் இயக்குனர்கள் / வசனகர்த்தாக்கள் சிலர் ‘காக்கா – வடை – நரி’ கதையை எடுப்பதற்காக தங்களின் டைரியில் குறிப்பு எழுதி வைத்திருந்தார்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து வந்து விட்டோம். ஆனால் எது – யார் எழுதியது என்று குழப்பமாக உள்ளது. கொண்டு வந்த குறிப்புகள் கீழே அப்படியே தரப்பட்டுள்ளன. அதை வைத்து அந்த இயக்குனர் / வசனகர்த்தா யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்… ! (எல்லாமே கற்பனைதான்… ! )
கதை இப்படி ஆரம்பிக்கிறது…
நரி வடையைத் தூக்கிகிட்டு போனவுடனே…
1. காக்கா நரியிடம் : ஏன்… ?
நரி : பசி.
காக்கா : எனக்கு… ?
நரி : அஸ்க்கு…
காக்கா : குடு…
நரி : மாட்டேன்.
காக்கா : அப்ப நான்…
நரி : ஓடிரு… (இயக்குனர்)
2. காக்கா நியாயம் கேக்கப் பஞ்சாயத்துக்குப் போச்சு. அங்க நரி, பொய்சாட்சியா, ஓநாயைக் கொண்டு வந்து நிப்பாட்ட, நொந்து போன காக்கா இறந்து போய்டுது. அந்தக் காக்காவோட இரண்டு பிள்ளைங்களும் வளர்ந்து, நரியைப் பழிவாங்கறதோட மட்டுமில்லாம, தன்னோட அப்பா காக்காவோட களங்கங்கத்தையும் துடைக்கறாங்க. (இயக்குனர்)
3. வடையை எடுத்திட்டுப் போன நரி ராத்திரி தூங்கறப்போ, கனவுல காக்கா வந்து பரிதாபமா நிக்குது. அனுதாபப்பட்ட நரி, மறுநாளே காக்கா வீட்டுக்குப் போய், தான் செஞ்ச தப்புக்குப் பிராயச்சித்தமா காக்காவோட மேற்படிப்புக்கு உதவி செஞ்சி, கல்யாணம் வரைக்கும் ஏற்பாடு செய்யுது. தாலி கட்டுற நேரம் பார்த்து ஒரு உண்மை தெரிய வருது. கிளைமாக்ஸில் பயங்கர டச்சிங்கா டயலாக் பேசிட்டு நரி போய்டுது. (இயக்குனர்)
4. காக்கா தன்னோட ‘Remote Satellite Connection’ மூலமா நரி இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சு, தானே ஒரு நாள் நரியா இருக்கிற மாதிரி ஒரு சின்ன Ordinance போட்டு, நரியையே தந்திரமா ஏமாத்தி வடையைத் திரும்பி வாங்கிடுது. (வசனகர்த்தா)
5. சுட்ட வடையை ஒளிச்சு வைக்க நரி இடம் பார்க்குது. அப்ப காக்கா அங்க வந்துடுது. ஒரு பைட். நரி தப்பிச்சுடுது. படத்தோட இயக்குனர் திடீர்னு ஸ்கிரீன்ல வந்து… ‘இது பாக்கத்தான் காக்கா… பாஞ்சா கார்கில் பீரங்கி’ அப்படீன்னு டயலாக் விடுறாரு… காக்கா, பாக்கி இருக்கிறவங்களோட இன்னொரு சண்டை போடுது. நரி இருக்கிற இடம் தெரிஞ்ச உடனே நேர்லயே போய் வடையை வாங்காம வெறும் சவால் மட்டும் நாலு முறை விட்டுட்டு இன்னொரு சண்டை. ஒரு சில குழந்தைத் தனமான தந்திரங்களால நரியை வெற்றி கொள்கிற காக்கா, கிளைமாக்ஸில் நரியைக் கொன்னுட்டு, ஜெயுலுக்குப் போகாம வெளியையே சுத்துது. (இயக்குனர்)
6. காக்கா வடையைத் திரும்ப வாங்கும் முயற்சியில் உதவுவதற்காக, காக்காவோட ஒண்ணு விட்ட மாமா ‘காரைக்கால் காத்தவராயன்’ வர்றாரு. வந்து பாத்தா, ஏற்கனவே காக்காவோட குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சனைகள். தன்னோட இம்சை ஐடியாக்களால அத்தனை பிரச்சனைகளளயும் சமாளிக்கிற காத்தவராயன் நரிகிட்ட கடைசியா வடையை வாங்கும்போது காக்காவே வேண்டாங்குது. ஏன். அது கிளைமாக்ஸ். (இயக்குனர்)
7. காக்கா சோகமாகுது. ஒரு பாட்டு. வடையை நினைத்துப் பாக்குது. ஒரு பாட்டு. நடுவுல ‘ரெண்டு பலாப்பழக் காமெடி’. நரி அந்தப் பக்கம் வடையைத் திங்குது. ஒரு பாட்டு. காக்காவும், நரியும் கனவுல ஒருத்தரை ஒருத்தர் நெனெச்சு ரெண்டு பாட்டு. கிளைமாக்ஸில் மாரியம்மன் கோயிலில் ஒரு பாட்டு. (இயக்குனர்)
8. திருடிக்கிட்டுப் போன வடையைத் திரும்பக் கேக்க நரியோட வீட்டுக்குக் காக்கா போகுது. ஆனா, நரியோ சாமர்த்தியமா, அந்த வடையைத் திருடினது தான் இல்லை, தன்னோட தம்பின்னு சொல்லி ஏமாத்திடுது. காக்கா விடாம தினமும் நரியோட வீட்டுக்குப் போக, நரியும் எப்படியோ கஷ்டப்பட்டு, ஒரு நாள் ரியல் கெட்டப்லயும், ஒரு நாள் தம்பி கெட்டப்லயும் வந்து ஆள் மாறாட்டம் செஞ்சி, குண்டக்க மண்டக்க டயலாக் பேசி, குழப்பித் தப்பிச்சுடுது. (வசனகர்த்தா)
9. காக்கா தன் அடியாள் காக்காவிடம் : வயசான பாட்டி சுட்ட வடையைத் திருடறவனெல்லாம் இந்த பூமிக்கு எதுக்கு. போட்டுத் தள்ளு. போட்டுத் தள்ளு.
(அதே நாள் ராத்திரி) : இதெல்லாம் செய்யறதுக்கு சாமியா வரும். நாமதான் செய்யனும்.
(இயக்குனர்)
10. காக்கா வருத்தத்தோட கொஞ்ச நாள் இருக்குது. அப்புறம், வடை திருடிய நரின்னு தெரியாமலேயே அதைக் காதலிச்சு கல்யாணமும் செஞ்சுக்க முடிவு செய்யுது. இதுக்கு நடுவுல அந்த நரியோ, காக்காவோட அப்பா காக்காவை விரும்ப ஆரம்பிச்சுடுது. அதே நேரம், இந்த நரியோட அம்மா நரி அந்த முதல் காக்காவோட குடும்பமே நடத்தற அளவுக்குப் போயிடுச்சு. (இயக்குனர்)
நீங்களும் முயற்சியுங்களேன்…
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/04-12-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…